உள்ளூராட்சி மன்றங்களுக்கு மேலதிக பட்டியலின் ஊடாக நியமிக்கப்படும் பிரதிநிதிகளுக்கு உத்தியோகபூர்வ கால எல்லை தொடர்பாக உரிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என கபே அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அண்மையில் மார்ச் 12 இயக்கத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த zoom கலந்துரையாடலின் போதே கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “உள்ளூராட்சி மன்ற புதிய தேர்தல் சட்டத்தின் ஊடாக உள்ளூராட்சி மன்றங்களுக்கு முன்னரை விட அதிகமான உறுப்பினர்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இவர்கள் வட்டார ரீதியாக நேரடியாக தேர்தலில் போட்டியிட்டும் அதேநேரம், அந்தக் கட்சிகள் பெறக்கூடிய வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் மேலதிக பட்டியல் ஊடாகவும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு மேலதிக பட்டியலின் ஊடாக உள்ளுராட்சி மன்றங்களுக்கு நியமிக்கப்பட கூடிய பிரதிநிதிகளை வருடா வருடம் கேட்டு விலக கூறி புதிய உறுப்பினர்களை நியமிக்கின்ற ஒரு செயற்பாட்டினை சில கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் பின்பற்றி வருகின்றதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
இதன் காரணத்தினால் இவ்வாறு வருடா வருடம் பிரதிநிதிகள் மாற்றப்படுகின்போது குறிப்பிட்ட பிரதேசத்திற்கான அபிவிருத்திகளை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.
அதேபோன்று உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ உறுப்பினர்களான இவர்களுக்கு தேவையான முழுமையான அனுபவத்தினையும் பெற முடியாதவர்களாக இவர்கள் மாற்றப்படுகிறார்கள்.
இந்த செயற்பாட்டின் ஊடாக முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைதான் அதிகரிக்கின்றன.
ஆகவே உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ கால எல்லைகள் தொடர்பாகவும் ஆராய்வது மிகவும் முக்கியமான விடயமாக இருந்து கொண்டிருக்கின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை குறித்த கலந்துரையாடலில் அரசியலில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல் மற்றும் கட்சிகளுக்குள்ளும் ஜனநாயகத்தை பின்பற்றுகின்ற செயற்பாடுகளை அதிகரித்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
இந்த கலந்துரையாடலில் தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்ற செயற்குழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான விதுர விக்ரமநாயக்க, தாரக பாலசூரிய, தேர்தல் கண்காணிப்பு குழுக்களின் பிரதிநிதிகள், ஏனைய சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட துறைசார் நிபுணர்கள் கலந்து கொண்டார்கள்.