கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னகர் கிராமத்திலுள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியின் மகனான சுபாஸ்சந்திரபோஸ் சுகிர்தன் என்ற கலைப்பிரிவு மாணவன் இணைப்பு செயலி ஒன்றை வடிவமைத்துள்ளார்.
குறித்த செயலியை வடிவமைக்க ஆரம்பித்தபோது, அதற்கான பெயரிடலை திட்டமிடாமையால் தனது பெயரை அதற்கு சூட்டியுள்ளார்.
குறித்த செயலி ஊடாக பயன்பாட்டில் உள்ள ஏனைய செயலிகள் போன்று, தரவுகளை பரிமாறுதல், காணொளி தொடர்பாடல் உள்ளிட்ட விடயங்களை அதில் உள்ளடக்கியுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள சிவபாதகலையகம் பாடசாலையில் சாதாரண தரம் வரை கல்வி கற்று தற்போது கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் கலைப்பிரிவில் உயர் கல்வியை தொடர்ந்து வருகின்றார்.
தாம் ஆரம்ப கல்வியை பயின்ற பாடசாலையில் பல்வேறு வள குறைபாடுகள் காணப்பட்டதாகவும், உயர்தரம் வரை இல்லாது சாதாரண தரம் வரை உள்ள நிலையில் வளக் குறைபாடுகள் குறித்த பாடசாலையில் காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தற்போது உயர் தர கல்விக்காக கிளிநொச்சி நகரிலுள்ள கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறு பின்தங்கிய பிரதேசங்களிலிருந்து தொழில்நுட்ப வளர்ச்சி நோக்கி பயணிக்கும் இவ்வாறான மாணவர்களை தட்டிக்கொடுக்க முன்வருவதில்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறான தொழில்நுட்ப விடயங்களை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு கணணி வசதியோ பொருளாதார வசதியோ தமக்கு இல்லை எனவும், அவ்வாறான உதவிகள் கிடைக்குமிடத்து தொழில்நுட்ப விடயங்களை முன்னோக்கி கொண்டு செல்லலாம் எனவும் அந்த மாணவன் தெரிவிக்கின்றார்.