ஜப்பானில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன 20 பேரை மீட்கும் பணிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆசிய நாடான ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் மேற்கு பகுதியில் அடாமி நகரில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்துவரும் கனமழை காரணமாக நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு என்பன ஏற்பட்டுள்ளன.
நெருக்கடியைச் சமாளிக்க அவசர மீட்புப்பணியாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள பிரதமர் யோஷிஹைட் சுகா, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் ஷிசுவோகா மாகாண பொலிஸ், தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஜப்பானின் இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 700 பேர் இன்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதியில் இடைவிடாது மழை தொடர்ந்தும் பெய்துவருவதால் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி சுமார் 387 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.