வேளாண் சட்டமூலங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 22 ஆம் திகதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தவுள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகி 19 நாட்கள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது எதிர்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையிலேயே மேற்படி போராட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பு, ‘வேளாண் பெருமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த பருவகால கூட்டத்தொடரை பயன்படுத்த வேண்டும்.
இதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் எச்சரிக்கை கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்படும். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே எதிர்வரும் 22 ஆம் திகதி தொடங்கி கூட்டத்தொடர் முடியும்வரையில், தினமும் 200 பேர் போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.