மத்திய அரசின் மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டம் ஆரம்பிக்கப்பட்ட (பி.எம்.எம்.எஸ்.ஒய்) பின்னர், ஜம்மு விவசாயிகளிடையே மீன் வளர்ப்பு பிரபலமடைந்துள்ளது.
ஜம்மு- கோ மன்ஹாசா பகுதி மக்கள், தங்களது வருமானத்தை உயர்த்துவதற்காக பாரம்பரிய விவசாயத்துடன் செயற்கை முறையில் மீன் வளர்ப்பு செயற்பாட்டை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் மீன் வளர்ப்பைத் தொடங்க விரும்பும் விவசாயிகளுக்கு பி.எம்.எம்.எஸ்.ஒய் கீழ் மீன்வள (ஜம்மு) இணை இயக்குநர் முகமது அஷ்ரப் டார்ஸி தெரிவித்துள்ளதாவது, “மீன்வளத் துறையினால் 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
நாங்கள் ஒரு வருடத்திற்கு விதை மற்றும் தீவனத்தையும் வழங்குகிறோம். மேலும், பிஸ்கல்ச்சர் தொடங்கும் விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மீன்வளத் துறையின் (ஜம்மு) பிராந்திய அபிவிருத்தி அலுவலர் குல்பூஷன் வர்மா, “திணைக்களம், விவசாயிகளுக்கு மீன் வளர்ப்பு தொடர்பாக மாத்திரமே பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது அவர்களுக்கு அடைகாக்கும் முகாமைத்துவம் மற்றும் ஹேட்சரிகள் குறித்தும் கல்வி கற்பிக்கப்படுகின்றது.
மேலும் பி.எம்.எம்.எஸ்.ஒய் இன் கீழ், நாங்கள் விவசாயிகளுக்கு அவர்கள் இடத்திலேயே பயிற்சி அளிக்கிறோம்.
அவர்களை இந்தியா முழுவதும் உள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்கிறோம். இந்த வழியில் அவர்கள் புதிய நுட்பங்களைப் பற்றி அறிந்துகொண்டு மற்றவர்களின் அனுபவங்களிலிருந்து மேம்படுகிறார்கள்.
மேலும் அரசாங்கம், விவசாயிகளுக்கு அவர்களின் தனிப்பட்ட குளங்களுக்கு மீன் உற்பத்திக்கு தேவையானவற்றினை வழங்குவதோடு மட்டுமல்லாமல், கிராமங்களில் உள்ள பொதுவான குளங்களுக்கும் இலவசமாக வழங்குகின்றது.
அந்தவகையில் ஆண்டின் இறுதியில், அனைவருக்கும் பொதுவான குளங்களிலிருந்து பிடிக்கப்படும் மீன்கள் ஏலம் விடப்பட்டு கிராம பஞ்சாயத்துக்கு பணம் வழங்கப்படுகிறது.
நிலமற்ற விவசாயிகளுக்கு பொது ஏரிகள் மற்றும் ஆறுகளில் இருந்து மீன் பிடிக்க உரிமமும் வழங்கப்படுகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பி.எம்.எம்.எஸ்.ஒய் கீழ் மீன் வளர்ப்பைத் தொடங்கிய விவசாயி தீபக் சிங் கூறியுள்ளதாவது, “பிஸ்கல்ச்சர் பாரம்பரிய விவசாயத்தை விட எளிதானது மட்டுமல்லாமல் அதிக இலாபம் ஈட்டக்கூடியது.
மேலும் நான் ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி, ஓய்வு பெற்ற பின்னர் எனது நிலத்தில் கோழி வளர்ப்பு மற்றும் விவசாயம் ஆகியவற்றினை மேற்கொண்டேன். ஆனால் மீன்வளத்திலேயே அதிகபட்ச இலாபம் பெற்றேன்.
அத்துடன் மீன் வளர்ப்பு எளிதானது மற்றும் அதிக இலாபம் ஈட்டக்கூடியது. சந்தையில் மீன்களுக்கான தேவையும் உள்ளது. விவசாயிகளுக்கு இது மிகவும் இலாபகரமானதாக இருப்பதால் இந்த திட்டத்தை கொண்டு வந்த பிரதமருக்கு நான் நன்றி கூறுகிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மற்றொரு விவசாயி அஸ்வினி சர்மா, இந்தத் திட்டம் அவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்க உதவும் என்று கூறினார்.
இதற்கு முன்னர் நான் எனது தந்தை மற்றும் முன்னோர்களைப் போன்று பாரம்பரிய விவசாயத்தை செய்து கொண்டிருந்தேன். பின்னர் நான் புதிதாக ஒன்றை முயற்சித்தேன். அதன்போதே மீன் வளர்ப்பு மிகவும் இலாபகரமானது என்பதை உணர்ந்தேன். இதுவும் எளிதானது மற்றும் யாராலும் செய்ய முடியும் எனவும் அஸ்வினி சர்மா நம்பிக்கை வெளியிட்டார்.
மேலும் மீன் வளர்ப்பு அதிக இலாபம் ஈட்டக்கூடியதாக இருப்பதால், விவசாயிகள் முன் வந்து மீன் வளர்ப்பை முயற்சிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான ஒரு மைல்கல்லாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.