பாகிஸ்தான் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து இளம் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
கார்டிப் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 35.2 ஓவர்கள் நிறைவில் 141 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பஃகர் சமான் 47 ஓட்டங்களையும் சதாப் கான் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், சகீப் மொஹமுத் 4 விக்கெட்டுகளையும் மெத்தியூ பார்க்கின்ஸன் மற்றும் கிரைஜ் ஓவர்டொன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கிரிகோரி 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 142 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணி, 21.5 ஓவர்கள் நிறைவில் வெறும் 1 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டாவிட் மாலன் ஆட்டமிழக்காது 68 ஓட்டங்களையும் ஜெக் கிரெவ்லி ஆட்டமிழக்காது 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஷாயின் ஷா அப்ரிடி 1 விக்கெட்டினை வீழத்தினார்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், 10 ஓவர்கள் வீசி 1 ஓட்டமில்லாத ஓவருடன் 42 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய சகீப் மொஹமுத் தெரிவுசெய்யப்பட்டார்.
ஐந்து அறிமுக வீரர்களுடன் களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து இளம் படைக்கு, இந்த வெற்றி மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகின்றது.
இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, நாளை லண்டன்- லோட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.