மன்னார் மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ள மேலும் 22 ஆயிரத்து 230 ‘பைஸர்’ தடுப்பூசிகளை, நாளை (புதன்கிழமை) முதல் செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தியர் ரி.வினோதன் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று வரை கிடைக்கப்பெற்ற 20 ஆயிரம் ‘பைஸர்’ தடுப்பூசிகளில் 19 ஆயிரத்து 500 வரையிலான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. மீதம் இருக்கின்ற தடுப்பூசிகளையும் செலுத்தவுள்ளோம்.
இந்நிலையில் நேற்று இரவு, எமக்கு மேலும் 22 ஆயிரத்து 230 பைஸர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசிகளையும் நாளை முதல் விநியோகிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.
குறித்த தடுப்பூசிகள், மன்னார் மாவட்டத்தில் 5 அல்லது 6 நிலையங்களில் ஒவ்வொரு நாளும் வழங்கப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.