நாட்டின் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அதிக சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் (Amber) மட்டத்திலான மின்னல் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்று (25) காலை 11.00 மணிக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை, இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் எனவும், அடுத்த அறிவிப்பு மாலை 6.00 மணிக்கு வெளியிடப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, அனுராதபுரம், கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம், களுத்துறை, கண்டி, கேகாலை, கிளிநொச்சி, குருநாகல், மன்னார், மாத்தளை, முல்லைத்தீவு, நுவரெலியா, பொலன்னறுவை, புத்தளம், திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய 17 மாவட்டங்களின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அம்பாறை, பதுளை, மட்டக்களப்பு, காலி, மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் தெரிவு செய்யப்பட்ட சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கம் காரணமாக வெளிப்புறங்களில் இருப்பவர்களுக்கு கடுமையான காயங்கள் அல்லது உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என திணைக்களம் எச்சரித்துள்ளது.
அத்துடன், வெளிப்புற வேலைகள், விளையாட்டுப் போட்டிகள், விவசாய நடவடிக்கைகள் மற்றும் பொது நிகழ்வுகளுக்கும் பாதிப்புகள் ஏற்படக்கூடும். மின்சார மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் சேதமடைவதுடன், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இடியுடன் கூடிய மழை நெருங்கும்போது வெளிப்புற விளையாட்டுகள், கட்டுமானப் பணிகள் மற்றும் விவசாய நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறும், பாதுகாப்பான கட்டடம் அல்லது கூரையுடன் கூடிய மூடப்பட்ட வாகனத்திற்குள் உடனடியாகச் செல்லுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கடற்கரைகள், நீச்சல் பகுதிகள், ஏரிகள், ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளிலிருந்து விலகியிருக்குமாறும், தனிமையான மரங்கள், கூடாரங்கள் மற்றும் திறந்தவெளி அல்லது பகுதியளவில் மூடப்பட்ட கட்டமைப்புகளின் கீழ் தஞ்சமடைய வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் மின்சார உபகரணங்கள், நீர்க்குழாய்கள் மற்றும் மின்சார இணைப்புகளிலிருந்து விலகியிருக்குமாறும், சிறுவர்கள் மற்றும் பாதுகாப்பு தேவைப்படுவோரை வீடுகளுக்குள் பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.















