முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் மட்டக்களப்பு – கல்குடா பகுதியில் கைதுசெய்யப்பட்ட 10 பேர் தொடர்பான விண்ணப்பங்கள் நேற்று(செவ்வாய்கிழமை) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல் தலைமையிலான குழுவினர் விண்ணப்பங்களை முன்வைத்தனர்.
வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் எம்.எச்.எம். பசீல் முன்னிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
எனினும், சந்தேகநபர்கள் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கான ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்க பொலிஸார் கால அவகாசம் கோரியுள்ளனர்.
அதற்கமைய, எதிர்வரும் 27ஆம் திகதி பொலிஸாரின் ஆட்சேபனைகள் சமர்ப்பிக்கப்படவிருக்கின்றன. இதனிடையே, நேற்றும் சந்தேகநபர்கள் மன்றில் ஆஜர்படுத்தப்படவில்லை.
சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 27ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், அன்றைய தினம் வரை சந்தேகநபர்களின் விளக்கமறியல் உத்தரவும் நீடிக்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை, கல்குடா, கிரான் பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.