அணு ஆயுதங்களில் எரிபொருளாகப் பயன்படுத்துவதற்கேற்ப யுரேனியத்தை தங்களால் 90 சதவீதம் வரை செறிவூட்ட முடியும் என ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரௌஹானி தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், கடுமையான நிலைப்பாட்டைக் கொண்ட தலைமை நீதிபதி இப்ராஹிம் ரய்சி, எதிர்வரும் தனது ஆட்சியில் கடுமையான நிலைப்பாடுகளை எடுக்கலாம் என்று வல்லரசு நாடுகளை எச்சரிக்கும் வகையில் ஹஸன் ரௌஹானி இந்த கருத்து அமைந்துள்ளது.
நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்துதெரிவித்த ஜனாதிபதி ஹஸன் ரௌஹானி,
“ஈரான் நினைத்தால், அணு ஆயுதங்களில் பயன்படுத்தும் அளவிற்கு 90 சதவீதத்துக்கும் மேல் யுரேனியம் செறிவூட்டலில் ஈடுபடலாம். ஆனால், அமைதியான பாதையைத் தேர்ந்தெடுக்கவே நாங்கள் விரும்புகிறோம்.
வியன்னாவில் வல்லரசு நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை புதுப்பித்திருக்க அரசாங்கத்தால் முடிந்திருக்கும். ஆனால், தீவிர நிலைப்பாட்டைக் கொண்ட அரசியல்வாதிகளால் அந்த வாய்ப்பு நழுவிப் போனது” என கூறினார்.
ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜேர்மனிக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தில், தனது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரான் சம்மதித்தது.
அதற்குப் பதிலாக, ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை நீக்குவதாக வல்லரசு நாடுகள் ஒப்புக் கொண்டன. ஒபாமா ஆட்சிக் காலத்தின்போது கையெழுத்தான இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, அடுத்து வந்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.
அத்துடன், ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது மீண்டும் விதித்தார். அதற்கு பதிலடியாக, ஒப்பந்த நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக மீறி வருகிறது. இதனால் அந்த ஒப்பந்தம் முறிந்துபோகும் அபாயம் நிலவி வருகிறது.