யாழ்ப்பாணம்- பருத்தித்துறை நகர் உள்ளிட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய மருந்தகங்கள் உட்பட அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட வேண்டும் என சுகாதாரத் துறையினரால் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கிகள், அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் திறக்க முடியும் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அத்துடன் பருத்தித்துறை நகரில் இருந்த பேருந்து தரப்பிடம் மூடப்பட்டுள்ளமையினால், டிப்போ சந்தியிலிருந்து பேருந்துகள் சேவையில் ஈடுபடும் எனவும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (வியாழக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில், பருத்தித்துறை சந்தை வியாபாரிகள் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்தே சந்தை முடக்கப்பட்டது. பருத்தித்துறை பெருநகர், 401 கிராம அலுவலகர் பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பருத்தித்துறை 3ஆம் குறுக்குத் தெரு, பத்திரகாளி வீதி, தும்பளை வீதி, கடற்கரை வீதி, கொட்டடி வீதி, வீ.எம்.வீதி, ஆகியவற்றில் இருந்து நகருக்குள் உள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.