இந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் ரி-20 தொடர்களிலிருந்து, இலங்கை கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேரா விலகியுள்ளார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அணித்தலைவராக செயற்பட்ட குசல் ஜனித் பெரேராவுக்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அவருக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் ஓய்வு தேவைப்படுவதால், அவர் எதிர்வரும் தொடரை தவறவிடுவார் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை முதல் தேர்வு விக்கெட் காப்பாளர் நிரோஷன் டிக்வெல்ல சமீபத்திய இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் உயிர் குமிழி மீறலைத் தொடர்ந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் யார் விக்கெட் காப்பு பணியை தொடருவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அத்துடன் துடுப்பாட்ட வீரர்களான குசால் மெண்டிஸ் மற்றும் தனுஷ்கா குணதிலக ஆகியோரும் அணியில் இணைவது நிச்சயமற்ற தன்மை நிலவுவதால் இலங்கை அணிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் மே மாதம் பங்களாதேஷில் ஒருநாள் போட்டியில் அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர் பினுரா பெர்னாண்டோவும் காயம் அடைந்துள்ளார். இதனால் ஜூலை முதல் தொடங்கும் ஒருநாள் தொடரைத் தவறவிடுவார்.
இந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான மட்டுப்படுத்தப்பட்ட தொடருக்கான, இலங்கை அணி இன்னமும் அறிவிக்கப்படவில்லை.