கியூபாவில் அரசாங்க எதிர்ப்பு போராட்டத்தின்போது கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என ஐ.நா. மனித உரிமை ஆணையகம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையர் மிஷெல் பாசெலே வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘கியூபாவில் போராட்டம் நடத்தி வருவோருடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது குறைகளை அந்த நாட்டு அரசாங்கம் கேட்டறிய வேண்டும். மேலும், அமைதியான முறையில் கூடி போராட்டம் நடத்தும் மக்களின் அடிப்படை உரிமையை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும்.
கியூபாவில் போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுவது கவலையளிக்கிறது. அதிலும் சிலர் கைது செய்யப்பட்டு தொடர்பு கொள்ள முடியாத இரகசிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரையும் கியூபா அரசாங்கம் உடனடியாக விடுவிக்க வேண்டும். மனித உரிமைகளை மீறும் கியூபா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கியூபாவில் உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை, கொரோனா விவகாரத்தை அரசாங்கம் கையாளும் முறை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 11ஆம் திகதி முதல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அரசாங்கம் மற்றும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் அடக்குமுiறையைக் கையாள்வதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இதுவரை 150க்கும் மேற்பட்ட போராட்டக்கார்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. போராட்டத்தின்போது தலைநகர் ஹவானாவில் ஒருவர் உயிரிழந்தார்.