மலையக சிறுமியின் மரணம் தொடர்பாக பொரளை பொலிஸாருடன் கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
குறித்த சிறுமியை கடந்த வருடம் டயகம பிரதேசத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்கு வேலைக்கு அழைத்துச் சென்ற நபரிடம் இன்று வாக்குமூலம் பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிறுமியின் தாய் மற்றும் ரிசாட் பதியுதீனின் மனைவியினது தந்தை ஆகியோரிடமும் நேற்று மேலதிக வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேநேரம், சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று நீதிமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ரிஷாட் பதியுதினின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபரில் டயகம 3ம் பிரிவில் இருந்து 15 வயது சிறுமி வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.
கடந்த 03ஆம் திகதி தீக்காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறித்த சிறுமி நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை குறித்து தெரியவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.