அரசாங்கத்தினால் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட முச்சக்கர வண்டிகளை தனிப்பட்ட விடயங்களுக்காக பயன்படுத்த வேண்டாம் என சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உதய ஹேமந்த கேட்டுக்கொண்டார்.
இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட முச்சக்கர வண்டிகளை திருகோணமலை காவல் துறை பிரிவுகளுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், முச்சக்கரவண்டிகள் அனைத்தும் கிராமப் பகுதி காவல்துறை நடவடிக்கைகளுக்காக இலங்கை அரசினால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பாரிய வாகனங்கள் மற்றும் காவல்துறை வாகனங்கள் பயணம் செய்ய இயலாத பகுதிகளில் இந்த வாகனங்களை பயன்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந் நிகழ்வில் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் உதய ஹேமந்த, திருகோணமலை பிராந்திய காவல்துறை அத்தியட்சகர் பிரஸன்ன பிராத்மனகே ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.