நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவினை மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் மீறக்கூடாது எனவும் நீதிமன்றத்தினை அவமதிக்கும் நிலையினை ஏற்படுத்தக்கூடாது எனவும் ஆணையாளரின் சட்டத்தரணி ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகர மேயரால், ஆணையாளருக்கு எதிராக இடைக்கால தடை எழுத்தாணை கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இன்று(வியாழக்கிழமை) மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இது தொடர்பான வழக்கு மேல் நீதிமன்றில் நீதிபதி எம்.என்.அப்துல்லா தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மாநகர சட்டத்தின்படி மேயருக்கு இருக்கின்ற அதிகாரங்களை, விரும்பினால் ஆணையாளருக்கு பாரப்படுத்தலாம். அப்படியாக இந்தப் புதிய ஆணையாளர் வந்தபோது 10 அதிகாரங்கள் கையளிக்கப்பட்டிருந்தன.
ஆனால், அதற்குப் பின்னர், கடந்த பெப்ரவரி 11ஆம் திகதி இன்னொரு சபைத் தீர்மானத்தின் மூலமாக கையளிக்கப்பட்ட அதிகாரங்கள் மீளப் பெறப்பட்டன.
அந்த அதிகாரங்களை சட்டப்படி மீளப்பெற்றிருந்தாலும் கூட தான் அதற்கு ஒழுகி நடக்கமடாட்டேன் எனவும், அந்த அதிகாரங்களைத் தானே பயன்படுத்துவேன் எனவும் ஆணையாளர் விடாப்பிடியாகச் செயற்பட்டுக்கொண்டிருப்பதன் காரணமாக அவரை அப்படியான செயற்பாட்டில் இருந்து தவிர்ப்பதற்கும் அந்த அதிகாரங்களை அவர் உபயோகிப்பதை சட்டப்படியாக நிறுத்துவதற்கும் இவ்வாறு இடைக்கால தடை எழுத்தாணை கோரி விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.
தலையீடு செய்யக் கூடாது என்றே நீதிமன்றம் இடைக்காலத் தடையத்தரவு கடந்த வழக்கில் வழங்கப்பட்டிருந்தது.
எனினும் நீதிமன்றத்தின் உத்தரவினையும் மீறி ஆணையாளர் தொடர்ச்சியாக முதல்வரினால் வழங்கப்பட்ட அதிகாரத்தில் தலையீடு செய்வதாக இன்றைய தினம் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதாக மாநகர முதல்வரின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.