ஆப்கானிஸ்தான் நாட்டின் 90 சதவீதப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துவிட்டதாக, தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
எனினும், இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அரசாங்கம் எந்த கருத்தினையும் கூறவில்லை. இந்தக் கூற்றை சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.
வெளிநாட்டு துருப்புக்கள் மீளப் பெறப்பட்டதை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டுள்ள தலிபான்கள், பெரும்பால பகுதிகளை கைப்பற்றிவிட்டனர். இதன்படி, ஆப்கானிஸ்தானில் உள்ள 400 மாவட்டங்களில், 200 மாவட்டங்கள் வரை தற்போது தலிபான்கள் வசம் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தலிபான்கள் அமைப்பின் செய்தி தொடர்பாளர் முஜாகித்; கூறுகையில், ‘ஒட்டுமொத்த எல்லை பகுதி முழுவதையும் நாங்கள் விரைவில் கைப்பற்றிவிடுவோம். அதன் பிறகு நாடு முழுவதும் எங்கள் வசம் வரும். பிறகு நாடு முழுவதையும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம்.
அதே நேரத்தில் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் ஆப்கானிஸ்தானில் செயற்பட அனுமதிக்க மாட்டோம். குறிப்பாக ஐ.எஸ். அமைப்புக்கு ஆப்கானிஸ்தானில் இடம் அளிக்க முடியாது’ என கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான், ஈரான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்லைகள் உள்ளன. இதில் தஜிகிஸ்தான் எல்லை முழுவதையும் தலிபான்கள் கைப்பற்றிவிட்டனர். உஸ்பெகிஸ்தானின் பெரும் பகுதி அவர்கள் வசம் உள்ளது.
நாட்டின் மேற்குப் பகுதியில் ஈரான் எல்லைப் புறத்தில் தொடங்கி, நாட்டின் மறுபுறத்தில் சீன எல்லைப் புறம் வரை ஒரு வளைகோடு போல தலிபான் கட்டுப்பாட்டு பகுதி பரவியிருக்கிறது.
ஹெராட் மாகாணத்தில் 5 மாவட்டங்களை சண்டை இல்லாமலேயே தலிபான்கள் கைப்பற்றிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை தலிபான்கள் 6 மாதத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டை முழுமையாக கைப்பற்றிவிடுவார்கள் என்று சில அமெரிக்க உளவுத்துறை ஆய்வாளர்கள் கூறுவதாக ஜூன் மாதம் அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது.
முன்னதாக, ஆப்கானிஸ்தானில் மூன்று மாத சண்டை நிறுத்தத்துக்கு ஈடாக, சிறை வைக்கப்பட்டிருக்கும் சுமார் ஏழாயிரம் பேரை விடுவிக்க வேண்டும் என தலிபான்கள் நிபந்தனை விதித்திருந்தனர்.
அத்துடன் தற்போது சண்டை நிறுத்தத்துக்கு முன்வந்திருக்கும் தலிபான்கள், தங்களது இயக்கத்தின் பெயரை அமெரிக்காவின் தடைப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.