ஜனநாயக சார்பு செய்தித்தாளான ஆப்பிள் டெய்லியின் முன்னாள் மூத்த ஊழியர்கள் இருவர் ஹாங்காங்கின் தேசிய பாதுகாப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
“வெளிநாட்டுப் படைகளுடன் கூட்டணி வைத்ததற்காக” ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த பத்திரிகையின் முன்னாள் துணை தலைமை ஆசிரியர் சான் புய்-மேன் மற்றும் நிர்வாக ஆசிரியர் ஃபங் வை-காங், பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை முன்னாள் நிர்வாக ஆசிரியர் லாம் மன்-சுங் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரம், AFP இடம் தெரிவித்துள்ளது.
மேலும் நிறுவனத்தின் செயற்பாடுகளை தெரிந்திருந்தால் லாம் கைது செய்யப்பட்டதாக HKFP தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜூன் 24 ஆம் திகதியன்று, செய்தித்தாளின் கடைசி பிரதியை வெளியிட்டதை மேற்பார்வையிட்ட பின்னர் லாம், நிர்வாக ஆசிரியர் பதவியில் இருந்து விலகினார்.
இதேவேளை ஹாங்காங் நிர்வாகத்தின் ஒடுக்குமுறையைத் தொடர்ந்து கடந்த மாதம் மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஆப்பிள் டெய்லியின் முன்னாள் ஊழியர்களை சீன சார்பு அதிகாரிகள் தொடர்ந்து குறிவைத்து வருகின்றனர்.
மேலும் பெய்ஜிங் விதித்த தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஆப்பிள் டெய்லி மற்றும் அதன் தாய் நிறுவனமான நெக்ஸ்ட் டிஜிட்டலில் ஐந்து உயர் நிர்வாகிகள் மற்றும் இரண்டு முன்னணி எழுத்தாளர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து ஜூன் மாத இறுதியில் ஹாங்காங்கில் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்த செய்தித்தாள் வாரியம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.