இலங்கை கொரோனா அச்சுறுத்தலான நிலைமையை நோக்கி மீண்டும் நகர்கின்றதென சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாதவர்களே அதிகளவு வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் மரணித்தும் உள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அசேல குணவர்தன மேலும் கூறியுள்ளதாவது, ”நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகின்றமையை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
அதாவது கடந்த வாரம் முதல் தற்போது வரையான தரவுகளில் உயர்வு காணப்படுவதன் ஊடாக மீண்டும் நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிகரித்து வருகின்றது என்பதை உணரக்கூடியதாக இருக்கின்றது.
இதற்கு காரணம் வைரஸ் தொற்று தொடர்பாக மக்களிடம் ஆரம்பத்தில் இருந்த அச்சம் தற்போது இல்லாமல் போயுள்ளமையே ஆகும்.
மேலும் அடையாளம் காணப்பட்டுவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் அதிகமானோர், எந்தவித தடுப்பூசியும் ஏற்றிக்கொள்ளாதவர்களாவர்.
எனவே மக்கள் விரைவாக தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.