நாட்டின் பல பகுதிகளிலும் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை முதல் கடும் மழையுடனான காலநிலை நிலவுகிறது.
இந்த நிலையில், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி பெய்யுமென அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வடமேல் மாகாணத்தில் தொடர்ச்சியாக மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்தகாற்று வீசுமெனவும் அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அத்தோடு, காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.