கொட்டகலை- திம்புள்ள தோட்டத்தில், சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி பாரிய போராட்டமொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
தலவாக்கலை, நாவலப்பிட்டி, திம்புள்ள பகுதியிலுள்ள அம்மன் ஆலயத்துக்கு முன்பாக அப்பகுதியிலுள்ள பெருந்தோட்ட தொழிலாளர்களினால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்துக்கான காரணம் கண்டறியப்பட வேண்டும், தரகர் முதல் சிறுமியை வேலைக்கு அமர்த்தியவர்கள் வரை இதனுடன் தொடர்புபட்ட அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் வீட்டுப் பணியாளர்களாக செல்லும் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்தும் அவர்களுக்கான உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு பணிக்குச் சென்ற 16 வயதுடைய சிறுமி, இம்மாதம் 3ஆம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறித்த சிறுமி நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை குறித்து தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.