ஆப்கானிஸ்தானில் தங்களது தாக்குதல்களை தலிபான்கள் தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த 46 இராணுவ வீரர்கள் தங்கள் நாட்டில் தஞ்சம் புகுந்து உள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
5 இராணுவ அதிகாரிகள் உட்பட 46 வீரர்கள் எல்லையை கடந்து தங்கள் நாட்டுக்குள் வந்து அடைக்கலம் கோரியாதாகவும், இராணுவ விதிமுறைகளின்படி அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கியதாகவும் பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
இதனிடையே தலிபான்களுக்கு எதிரான போரில், பால்க் மாகாணத்தில் உள்ள கால்தர் மாவட்டம், ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு படையினரால் மீண்டும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதற்காக நடந்த மோதலில் தலிபான் குழுக்களை சேர்ந்த 20 போராளிகள் உயிரிழந்துள்ளதோடு 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதேபோல, குனார், காந்தஹார், ஹெரட் மற்றும் ஹெல்மண்ட் ஆகிய மாகாணங்களில் தலிபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து இராணுவம் நடத்திய தாக்குதல்களில் 89 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 82 பயங்கரவாதிகள் படுகாயமடைந்தனர்.
இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் புதைத்து வைத்திருந்த 13 கண்ணிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டன.