ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிடுவதற்காக ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர்கள் தேனுக விதானகமகே, டி.வி. சானக மற்றும் ரொஷன் ரணசிங்க ஆகியோர் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் பேசியபோதே அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்தார்.
ஒலிம்பிக் போட்டியில் உத்தியோகப்பூர்வமாக பங்கேற்ற விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுடன் சென்ற மூவர் தொடர்பாகவும் தொடக்க விழாவில் இலங்கை தேசியக் கொடியைக் காட்டத் தவறியமை தொடர்பாகவும் விசாரணை ஆரம்பிக்கப்படும் என கூறினார்.
அரச செலவினங்களை முடிந்தவரை குறைக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷக் கோரியிருந்த நிலையில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுடன் இராஜாங்க அமைச்சர்களின் மகிழ்ச்சியான சுற்றுப்பயணம் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.
நிறுவனம் ஒன்றின் நிதியுதவி மூலமே அவர்கள் ஜப்பான் சென்றதாகவும் அரசாங்கம் அவர்களின் சுற்றுப்பயணத்திற்கு ஒரு ரூபாயை கூட செலவிடவில்லை என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இருப்பினும் உண்மையை வெளிப்படுத்த விசாரணை அவசியம் என்பதை தான் ஒப்புக்கொள்வதாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.