நுவரெலியா- தலவாக்கலை, லிந்துலை நகரத்திற்கு அருகாமையில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையின் பிரபல நடிகையான பிரென்சிஸ்கு ஹட்டிகே தெரஸ் ஹயசிந்த விஜயரத்ன (வயது 75) உயிரிழந்துள்ளார்.
இவர் பயணம் மேற்கொண்ட வான், லிந்துலை நகரத்திற்கு அருகில் பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் வானை செலுத்தி சென்ற சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்துக்கு காரணம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பாக வான் சாரதியை கைது செய்துள்ள லிந்துலை பொலிஸார், அவரை நுவரெலியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன் விபத்தில் உயிரிழந்த நடிகையின் சடலம் கண்டெடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு பொலிஸாரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.