சீனாவின் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஜனநாயக ஆதரவுப் போராட்டக்காரர் டாங் யிங்-கிட்டுக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின் பயங்கரவாத குற்றப் பிரிவின் கீழ் ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
இந்த மாதம் முதலாம் திகதி நடைபெ;றற பேரணியின் போது அவர் பொலிஸார் மீது மோட்டார் சைக்கிளை மோதியதாகவும், தடை செய்யப்பட்ட வாசகங்கள் அடங்கிய கொடியை வைத்திருந்ததாகவும் அவர் மீது பயங்கரவாத மற்றும் பிரிவினை குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன.
இதனைத்தொடர்ந்து, 24 வயதான டாங் யிங்-கிட், மீதான வழக்கு விசாரணை ஹொங்கொங் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் பயங்கரவாதக் குற்றப் பிரிவின் கீழ் நடைபெற்ற இந்த முதல் வழக்கு விசாரணை, அனைவரது கவனத்தையும் ஈர்த்;தது.
இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி ஜனநாயக ஆதரவாளர்களை ஹொங்காங் அரசாங்கம் எவ்வாறு ஒடுக்கும் என்பதற்கு இந்த விசாரணை முன்னுதாரணமாக இருக்கும் என்று கருதப்பட்டது.
இந்த சூழலில் அண்மையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், டாங் யிங் கிட்டை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. இந்தநிலையில், இந்த வழக்கில் தண்டனை விபரம் நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட்டது.
டாங் யிங் கிட் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என அரசாங்க தரப்பு சட்டத்தரணிகள் கோரிய நிலையில், நீதிபதி அவருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.