கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளில் இலக்கை அடைவதற்கான பாதையில் இலங்கை பயணிக்கிறது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதத்துக்குள் இலங்கை தடுப்பூசி செலுத்தும் இலக்கை அடையும் நிலையில் உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியெசஸ் கூறியுள்ளார்.
இது குறித்து தாம் மகிழ்ச்சி அடைவதாகவும் இதற்காக அரசாங்கத்துக்கும் நாட்டு மக்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் ருவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “செப்டம்பர் இலக்குக்கு முன்னதாக, இலங்கை தனது மக்கள்தொகையில் 10% பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடுவதை கண்டு மகிழ்ச்சி! அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் அவர்களின் முயற்சிகளுக்கு நன்றி. வைரஸை கட்டுப்படுத்துவதற்கான நிரூபிக்கப்பட்ட பொது சுகாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, ஒரே நாளில் 5 இலட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்திய இலங்கையின் சாதனையை WHO கடந்த வாரம் பாராட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.