கிளிநொச்சிக்கு தேவையான மேலும் 15 ஆயிரம் தடுப்பூசிகளைப் பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளதாக அமைச்சரின் இணைப்பாளர் தவநாதன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கிளிநொச்சியில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் கடந்த 27 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்படி 6 ஆவது நாளாக 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்றும் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
மேலும் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக தடுப்பூசிகளை மிகுந்த ஆர்வத்துடன் மக்கள் பெற்றுச் செல்வதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
இந்நிலையில் கிளிநொச்சியில் வாழும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, மேலும் 15 ஆயிரம் தடுப்பூசிகள் தேவையாக உள்ளதாக சுகாதார தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர், 15 ஆயிரம் தடுப்பூசிகளையும் விரைவில் பெற்றுத்தருவதாக உறுதியளித்தள்ளார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.