இலங்கையில் பரவி வரும் டெல்டா பரவல் அதிகரிப்பை கட்டுப்படுத்தி, உயிரிழப்புகளை குறைப்பதற்காக அம்பாறை- சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த மாணவன் ஒருவர், புதிய முகக்கவசத்தை கண்டுப்பிடித்துள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மாணவன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் மாணவன் அப்துல் அமீர் முஹம்மது அதீப் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டில் டெல்டா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையினால், அதில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கு வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களுக்கும் கொரோனா நோயாளிகள் பாவிப்பதற்காகவும் முகக்கவசம் ஒன்றினை தயாரித்துள்ளேன்.
இதனை ஹெல்மெட் (தலைக்கவசம்) போன்று அணிய வேண்டும். இதை அணிந்தவுடன் மாஸ்க் (முகக்கவசம்) அணிய தேவை இல்லை.
ஆனாலும் இதனை அணியும் வைத்தியர்களோ அல்லது நோயாளிகளோ கட்டாயம் கொரோனா பாதுகாப்பு ஆடை அணிய வேண்டும்.
எனவே குறித்த கண்டுபிடிப்பினை அங்கீகரித்து, நாட்டில் டெல்டா மற்றும் திரிவுபடுத்திய கொரோனா வைரஸ் நோய் பரவல் ஆகியவற்றில் இருந்து அனைவரையும் காப்பாற்ற சம்பந்தப்பட்டவர்கள் உதவ வேண்டும்” என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.