ஆயிரக்கணக்கான ஹொங்கொங் குடியிருப்பாளர்களுக்கு அமெரிக்காவில் தற்காலிக பாதுகாப்பான புகலிடம் வழங்கப்பட உள்ளதாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
ஹொங்கொங்கின் சுதந்திரம் சீனாவால் மீறப்படுவதால், அமெரிக்கா, ஹொங்கொங் வாசிகளை 18 மாத காலம் தங்க அனுமதிக்கும் என பைடன் உறுதிப்படுத்தினார்.
இதன்மூலம், அமெரிக்காவில் உள்ள ஆயிரக்கணக்கான ஹொங்கொங் குடியிருப்பாளர்கள் பயனடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுதொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறுகையில், ‘ஹொங்கொங் வாசிகள் தங்குவதற்கு கட்டாய வெளிநாட்டு கொள்கை காரணங்கள் உள்ளது. சீனா அதன் மீதமுள்ள ஜனநாயக செயல்முறைகள் மற்றும் நிறுவனங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தி வருகிறது, கல்வி சுதந்திரத்திற்கு வரம்புகளை விதித்து, ஊடக சுதந்திரத்தை நசுக்குகிறது.
புதிய பாதுகாப்பு ஆட்சியில் ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என கூறினார்.
இருப்பினும், வொஷிங்டனில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் லியு பெங்யு, ‘அமெரிக்க அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சித்தார். பைடன் உண்மைகளை புறக்கணித்து திரிபுபடுத்தி, சீனாவின் உள் விவகாரங்களில் கடுமையாக தலையிடுகிறார்’ என்று பெங்யு கூறினார்.
ஆனால், அமெரிக்காவின் ஆராய்ச்சியாளரான மேகி ஷும், ஹொங்கொங்கிற்குத் திரும்புவது குறித்த நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் பல மாணவர்கள் குழப்பத்தில் இருப்பதாகவும் பைடனின் செய்தியை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், ‘எங்களை கைவிடாத இந்த பைடனின் முடிவை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். அமெரிக்கா எங்களை கைவிடவில்லை’ என கூறினார்.
பிராந்தியத்தில் சீனாவின் பாதுகாப்புச் சட்டம் கடந்த ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, ஹொங்கொங்கில் இருந்து நிரந்தர வதிவிடத்திற்கான பாதையை பிரித்தானியா வழங்கியுள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.