இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால் தென்கிழக்கு ஆசியப் பகுதியில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள வாராந்த அறிக்கையில், ”தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கடந்த வாரம் சுமார் 7 இலட்சத்து 99 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது முந்தைய வாரத்தை விட 5 சதவீதம் குறைவாகும்.
அந்தப் பிராந்தியத்தில் இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில், கடந்த வாரம் இலங்கையில், 26 வீதமும் தாய்லாந்தில் 20 வீதமும் புதிய கொரோனா தொற்று அதிகரித்தது.
எனினும் இந்தியாவில் புதிய கொரோனா தொற்று தொடர்ந்து நிலைத்தன்மையுடன் இருந்தது. மேலும் இந்தோனேசியா, மியான்மார் ஆகிய நாடுகளில் கடந்த மாதம் தினசரி கொரோனா தொற்று குறைந்து வருகிறது.
இந்த காரணங்களால் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை கடந்த வாரம் குறைந்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.