அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கு ஆப்கானிஸ்தானின் இறுதி பெரிய நகரான மசார்-இ-ஷெரீப்பை தலிபான் போராளிகள் கைப்பற்றியுள்ளனர்.
உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானின் எல்லைகளுக்கு அருகில் உள்ள பெரிய பொருளாதார மையமாக இருந்த குறித்த பகுதி சண்டையின்றி வீழ்ச்சியடைந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வௌிநாட்டு படையினர் மீள அழைக்கப்பட்டதிலிருந்து தலிபான்களால் தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றது.
அதன்படி தலிபான்கள் இப்போது நாட்டின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தி தலைநகர் காபூலை நெருங்கி வருகின்றனர்.
வன்முறையால் கால் மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன் மேலும் பலர் பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காபூலுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.
தலிபான்களால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் புர்கா அணிய வேண்டும் என பெண்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் சமூக விதிகளை மீறியதற்காக மக்களை அடித்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இறுதியாக 1990 ஆண்டுகளில் மசார்-இ-ஷெரீப் நகரை தலிபான்கள் கைப்பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.