தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்த தொடர்பும் இல்லை என தலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே தலிபான் செய்தித் தொடர்பாளரும் சர்வதேசப் பேச்சுவார்த்தையாளருமான சுஹைல் ஷாஹீன் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தாங்கள் ஒரு சுதந்திரமான விடுதலைப் படையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது கடந்த 20 ஆண்டுகளாக தமது நாட்டின் ஆப்கானிஸ்தானின் விடுதலைக்காக வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானின் பாமியன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான புத்தர் சிலை, தலிபான்களால் மார்ச் 2001ஆம் ஆண்டு அழிக்கப்பட்டது. பழங்கால மணற்கல் சிற்பங்களை அழித்ததை கண்டித்த நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.
இந்த நிலையில், தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவது பௌத்த தளங்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்ற அச்சம் தற்போது உள்ளதாக குறித்த ஆங்கில ஊடகம் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறிருப்பினும் தலிபான் தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் ஆப்கானிஸ்தானில் உள்ள பௌத்த தளங்கள் ஆபத்தில் இருக்காது என்று ஷாஹீன் வலியுறுத்தினார் என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலிபான்களை பயங்கரவாதிகளாக இலங்கை கருதக்கூடாது என அவர் கூறியதாகவும் தங்கள் நாட்டின் விடுதலைக்காகப் போராடிய இலங்கையின் முன்னோர்களைப் போல தாங்கள் ஆப்கானிஸ்தானின் சுதந்திரப் போராளிகள் என அவர் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கப் படைகள் வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து ஒரு வாரத்தில் தலிபான்கள் ஆப்கானிஸ்தான் முழுவதையும் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.