திருகோணமலை மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) காலை முதல் அத்தியாவசிய சேவை தவிர்ந்த அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
கொரோனா நோயாளர்களது எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பினை அடுத்து திருகோணமலை வர்த்தக சம்மேளனம் மற்றும் திருகோணமலை நகர சபையினால் நேற்றையதினம் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
மருந்தகங்கள், அத்தியாவசிய சேவைக்கான வியாபார நிலையங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து கடைகளும் மூடப்பட்டிருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருந்ததாக பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மொத்த மீன் சந்தை திருகோணமலை மத்திய பொதுச்சந்தை என்பன மூடப்பட்டிருப்பதையும் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் திறந்திருப்பதையும் அவதானிக்கக்கூடியதாக இருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.