திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் இலங்கை அகதிகள் 16 பேர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தமையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி சிறப்பு முகாமில் 100 இற்கும் மேற்பட்ட அகதிகள் உள்ள நிலையில், இலங்கை அகதிகள் பலரின் மீது பொய் வழக்குகள் பதியப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தண்டனை காலம் நிறைவடைந்த பின்னும் தொடர்ந்து சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா காலத்தில் சரி தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி 20 இற்கும் மேற்பட்ட அகதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த 20 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து 14 பேர் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாகவும், இரண்டு பேர் கழுத்து மற்றும் வயிற்று பகுதிகளை அறுத்துக் கொண்டதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த 16 பேரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.