இந்தியாவின் வடக்கு கிழக்கு மாநிலங்கள் புற்றுநோயின் தலைநகரமாக மாறி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், நோய் தொடர்பான தேசிய தகவல் மற்றும் ஆய்வு மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் மேற்படி கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவர் கலிங் ஜிராங், கடந்த 2020 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாநிலங்களில் புற்றுநோயால் 50 ஆயிரத்து 317 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதில் 27 ஆயிரத்து 503 ஆண்களும், 22 ஆயிரத்து 814 பெண்களும் உள்ளடங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த பாதிப்பு 2025 ஆம் ஆண்டுவரை அங்கு தொடரும் எனக் கருதப்படுவதாக தெரிவித்த அவர், மார்பக புற்றுநோயால் 3 ஆயிரத்து 674 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதேநேரம் அருணாசல பிரதேசத்தின் பபும் பரே மாவட்டம், மிஸோரமில் உள்ள ஐஸால் மாவட்டத்தில் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாட்டிலேயே அதிகமாக உள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.