நாட்டிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த கோரிக்கை குறித்து, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவதானம் செலுத்தியுள்ளார்.
வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு சர்வகட்சி சம்மேளனத்தை கூட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, அண்மையில் ஜனாதிபதியை நேரில் சந்தித்த ரணில் விக்ரமசிங்க கோரிக்கை ஒன்றினை முன்வைத்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது ஜனாதிபதி, சர்வகட்சி சம்மேளனத்தை நடத்துவது தொடர்பாக பிரதமர், சபாநாயகர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் சர்வகட்சி சம்மேளனத்தின் ஊடாக பெறப்படும் யோசனை திட்டங்களை, நாட்டில் செயற்படுத்துவதன் ஊடாக கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமென பாலித்த ரங்கே பண்டார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.