காபூல் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90ஆக உயர்ந்துள்ளதோடு 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே நேற்று (வியாழக்கிழமை) நடத்தப்பட்ட இரு தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் அமெரிக்க கடற்படை வீரர்கள் 13பேர் உயிரிழந்துள்ளதாகவும் அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது.
ஐ.எஸ். பயங்கரவாதக் குழு இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இத்தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறுகையில்,
‘ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கர்களை முழுவதுமாக மீட்போம். எங்களுடைய ஆப்கானிஸ்தான் கூட்டாளிகளையும் அங்கிருந்து வெளியேற்றுவோம். எங்களுடைய மீட்புப் பணி தொடர்ந்து நடைபெறும்.
காபூல் விமான நிலைய குண்டுவெடிப்பு சம்பவத்தை நாங்கள் மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம். அதற்குப் பதிலாக எங்கள் படைகளுடன் உங்களை வேட்டையாடுவோம்.
காபூல் விமான நிலையத்தில் நடந்த இந்த தாக்குதலில் தலிபான்களுக்கும் இஸ்லாமிய அரசாங்கத்துக்கும் தொடர்பு இருப்பதாக எந்தவித ஆதாரமுமில்லை’ என கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த துயரம் இனி ஒருபோதும் நடக்க அனுமதிக்கக்கூடாது என்று தெரிவித்தார்.
காபூல் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிரிழந்த கடற்படை வீரர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, அமெரிக்கா முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் காபூலில் பயங்கரவாத தாக்குதலில் உயிரழந்தவர்களை நினைவுகூறும் வகையில் ஒகஸ்ட் 30 மாலை வரை வெள்ளை மாளிகை மற்றும் அனைத்து பொது கட்டடங்கள், மைதானங்களில் அமெரிக்கக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கப்படும் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறினார்.
கடந்த ஒகஸ்ட் 14ஆம் திகதி முதல் இதுவரை 1,00,100 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் கடந்த ஜூலை முதல் 1,05,700 பேரை ஆப்கானில் இருந்து வெளியேற்றியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.