ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடரும் என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) மூத்த அதிகாரிகளுடன் நடந்த அவசரக் கூட்டத்தில் (கோப்ரா கூட்டம்) உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் கூறுகையில், ‘தலைநகர் காபூல் விமான நிலையத்தில் இழிவான தாக்குதல் நடந்தாலும், ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை பிரித்தானியா தொடரும். கடைசி தருணம் வரை பிரித்தானியா சமநிலையாக வேலை செய்யும்’ என கூறினார்.
நேற்று (வியாழக்கிழமை) அபே நுழைவாயில் வெளியே நடந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில், அமெரிக்க மற்றும் பிரித்தானிய படைகள் வெளியேற்றத்திற்கு உதவ நிறுத்தப்பட்டுள்ளன.
எனினும், இந்த குண்டுவெடிப்பில் பிரித்தானிய இராணுவம் அல்லது அரச உயிரிழப்புகள் இல்லை என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, விமான நிலைய சுற்றளவுக்குள் இருந்தவர்கள் தொடர்ந்து பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காபூல் விமான நிலையத்தில் தற்போது 5,800 அமெரிக்க வீரர்களும் சுமார் 1000 பிரித்தானிய வீரர்களும் உள்ளனர்.
இதுவரை ஆப்கானிஸ்தானில் இருந்து 104,000 பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதில் 66,000 பேர் அமெரிக்கா மூலமாகவும் மேலும் 37,000 பேர் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மூலமாகவும் காபூலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கனடா, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் டென்மார்க் உட்பட பல நாடுகள் ஏற்கனவே தங்களது மீட்பு நடவடிக்கைகளை நிறுத்திவிட்டன.
விமான நிலையத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக பாதுகாப்பு அளித்து வந்த துருக்கி தனது படைகளை மீளப் பெறுவதாக அறிவித்துள்ளது.