கரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின் ஆரம்ப போட்டிகளில் கயானா அமசோன் அணி மற்றும் சென்.கிட்ஸ் நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
நடப்பு தொடரின் முதல் லீக் போட்டியில், கயானா அமசோன் அணியும் ட்ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணியும் மோதின.
சென்.கிட்ஸ் மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ட்ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கயானா அமசோன் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹெட்மியர் 54 ஓட்டங்களையும் ஓடீன் ஸ்மித் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
ட்ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சில், அகீல் ஹொசைன் மற்றும் நரேன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஜெய்டன் சீல்ஸ், ராம்போல் மற்றும் இசுரு உதான ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 143 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ட்ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் கயானா அமசோன் அணி 9 ஓட்டங்களால் வெற்றிபெற்றுது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, தினேஷ் ராம்தின் 28 ஓட்டங்களையும் டிம் செய்பர்ட் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
கயானா அமசோன் அணியின் பந்துவீச்சில், ரொமாரியோ செப்பர்ட் 3 விக்கெட்டுகளையும் இம்ரான் தஹீர் மற்றும் ஒடீன் ஸ்மித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் நவீன் உல் ஹக் மற்றும் மொஹமட் ஹபீஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 24 ஓட்டங்களையும் 2 விக்கெட்டுகளையும் சாய்த்த ஒடீன் ஸ்மித் தெரிவுசெய்யப்பட்டார்.
தொடரின் இரண்டாவது லீக் போட்டியில், பார்படோஸ் றோயல்ஸ் அணியும் சென்.கிட்ஸ்- நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
சென்.கிட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பார்படோஸ் றோயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்.கிட்ஸ்- நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, செர்பேன் ருத்தர்போர்ட் 53 ஓட்டங்களையும் டிஜே பிராவோ ஆட்டமிழக்காது 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பார்படோஸ் றோயல்ஸ் அணியின் பந்துவீச்சில், ஒசேன் தோமஸ் 3 விக்கெட்டுகளையும் மொஹமட் ஆமிர் மற்றும் ஜேஸன் ஹோல்டர் ஆகியோர் தலா 1 விக்கெட்;டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 176 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பார்படோஸ் றோயல்ஸ் அணியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் சென்.கிட்ஸ்- நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணி 21 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சாய் ஹோப் 44 ஓட்டங்களையும் அசாம் கான் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
சென்.கிட்ஸ்- நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணியின் பந்துவீச்சில், செல்டோன் கொட்ரேல் மற்றும் டோமினிக் ட்ரேக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் பெபியன் அலென் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 53 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட செர்பேன் ருத்தர்போர்ட் தெரிவுசெய்யப்பட்டார்.