ஆப்கானிஸ்தானில் விரைவில் புதிய அரசாங்கம் அமையவுள்ள நிலையில், அந்நாட்டின் அதிகாரமிக்க உச்சநிலைத் தலைவராக ஹேபதுல்லா அகுண்ட்ஸாதா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரான் பாணியில் தலைமை மதகுருவை உச்சநிலைத் தலைவராகக் கொண்ட ஆட்சிக் கட்டமைப்புடன் இந்த அரசாங்கம் அமையவுள்ளது.
தலைமை மதகுருவாக நியமிக்கப்பட்டுள்ள 60 வயதான தலிபான்களின் தலைவர் ஹேபதுல்லா அகுண்ட்ஸாதா விரைவில் பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தலிபான்களின் தகவல் மற்றும் கலாசாரக் குழுவைச் சேர்ந்த மூத்த அதிகாரி முஃப்தி இனாமுல்லா சமங்கனி கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான அனைத்து ஆலோசனைகளும் நிறைவடைந்துவிட்டன. புதிய அமைச்சரவையை அமைப்பதற்குத் தேவையான ஆலோசனையும் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.
எனவே, இன்னும் 3 நாட்;களில் புதிய அரசாங்கம் குறித்து அறிவிப்பு வெளியாகும். ஆப்கானிஸ்தானில் அமையவிருக்கும் புதிய அரசாங்கம், ஈரானில் உள்ளதைப் போன்ற ஆட்சிக் கட்டமைப்பைக் கொண்டதாக இருக்கும். அந்த அரசாங்கத்தில், தலைமை மதகுருவாக முல்லா அகுண்ட்ஸாதா பொறுப்பு வகிப்பார்
புதிய அரசாங்கத்தில் மாகாணங்கள் ஆளுநர்களின் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும். மாவட்டங்களின் ஆட்சிப் பொறுப்பை மாவட்ட ஆளுநர்கள் கவனித்துக்கொள்வர்
புதிய ஆட்சிக் கட்டமைப்பின் பெயரும் புதிய தேசியக் கொடி மற்றும் தேசிய கீதமும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை’ என கூறினார்.