இராணுவ ஆட்சியை நோக்கி அரசாங்கம் நகர்வதாக மக்கள் சந்தேகிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் த.சித்தார்த்தன் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையினுடைய பொருளாதாரம் பாரிய பின்னடைவை கண்டுக்கொண்டு இருக்கின்றது.
மக்கள் ஒரு நேரம் உணவு உட்கொள்ள முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். அத்தியாவசிய பொருட்களின் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டு இருக்கின்றது.
இந்த விலையேற்றத்திற்கு அரசாங்கம் விட்ட தவறுகளே முக்கிய காரணமாக இருக்கின்றது.
அதாவது, அண்மையில் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய மக்கள் விடுதலை முன்னணியின் தவைர் அநுர குமார திசாநாயக்க, மிகப் பெருந்தொகையான சீனி இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்காமல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் சீனியின் விலைகள் அதிகரித்துள்ளது என சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் தற்போது பதுக்கிவைக்கப்பட்ட சீனிகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு கவனயீனமின்றி அரசாங்கம் செய்கின்ற செயற்பாடுகளினால்தான் மக்கள் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர்.
இதேவேளை கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் முடக்கங்கள் தாமதமாக வந்தாலும் கூட, அதனை உரிய முறையில் நடைமுறைப்படுத்தவில்லை.
அதாவது, மக்கள் அதிகளவான இடங்களில் ஒன்றுக்கூடுவதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இதனை பொலிஸ் உள்ளிட்ட உரிய அதிகாரிகளும் கவனத்தில் கொள்வதாக தெரியவில்லை.
ஆகவே இதனை உரிய முறையில் நடைமுறைப்படுத்தாவிட்டால், பெரும் இன்னலை அனைவரும் சந்திக்க நேரிடும்.
இதேவேளை அனைத்து விடயங்களையும் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் அரசாங்கம் தீவிரமாக இருக்கின்றது. அதிகாரங்கள் அனைத்தும் ஓரிடத்தில் குவிக்கப்பட்டு, ஒரு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கின்றதை போல மக்கள் மத்தியில் பயத்தினை உருவாக்கியுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.