மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்காக ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட நட்பு நாடுகள் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் மீதான போர் தொடங்கி இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில், உலக எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதத்தைக் கொண்டுள்ள ஹார்முஸ் நீரிணையை ஈரான் தொடர்ந்து முடக்கி வருகிறது.
இது குறித்துத் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள் இந்தப் பாதையைப் பாதுகாப்பாக வைத்திருக்கத் தங்களது போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, ஈரானின் இராணுவ பலம் 100 சதவீதம் அழிக்கப்பட்டுவிட்டதாக ட்ரம்ப் உரிமை கோரினாலும், ஈரான் இன்னும் ஆளில்லா விமானங்கள் (Drones), கண்ணிவெடிகள் அல்லது ஏவுகணைகள் மூலம் கப்பல்களைத் தாக்க வாய்ப்புள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.
“ஈரானின் கடற்கரை ஓரங்களில் அமெரிக்கா குண்டுமழை பொழியும் எனவும் ஈரானிய படகுகளைச் சுட்டு வீழ்த்தும் எனவும் எவ்வாறாயினும் ஹார்முஸ் நீரிணையை நாங்கள் பாதுகாப்பான மற்றும் சுதந்திரமான பாதையாக மாற்றுவோம்” எனவும் அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப்பின் இந்தக் கோரிக்கைக்குப் பதிலளித்துள்ள பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம், பிராந்தியத்தில் கப்பல் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான “பல்வேறு தெரிவுகள்” குறித்து நட்பு நாடுகளுடன் ஆலோசித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
முன்னதாக, பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மரை விமர்சித்திருந்த ட்ரம்ப், தற்போது எண்ணெய் விநியோகத்தைப் பெறும் அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் பிரித்தானியாவின் ‘HMS Dragon’ போர்க்கப்பல் ஏற்கனவே சைப்ரஸ் நோக்கிப் புறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கடந்த பிப்ரவரி 28 முதல் போர் தொடங்கியதிலிருந்து ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் 16 கப்பல்கள் தாக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் போக்குவரத்துத் தடை காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
ஈரானின் கார்க் தீவில் (Kharg Island) உள்ள முக்கிய எண்ணெய் உள்கட்டமைப்புகளைத் தாக்கப்போவதாக அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை, போரை மேலும் தீவிரப்படுத்தும் எனக் கருதப்படுகிறது.













