ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலுக்கு அருகில் இருக்கும் பஞ்ஷீர் மாகாணத்தை கைப்பற்றி விட்டதாக தலிபான்கள் கூறுவது உண்மைக்கு புறம்பானது என பஞ்ஷீர் போராளிகள் அமைப்பு தெரிவித்துள்து.
அத்துடன் பஞ்ஷீர் மாகாண போராளிகளில் முக்கிய நபரான அம்ருல்லா சலே, தப்பி ஓடிவிட்டதாக செய்திகள் வெளியாகிய நிலையில், அதை மறுத்து அம்ருல்லா சலெ தாமே காணொளிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதேவேளை பஞ்ஷீர் போராளிகள் அமைப்புடன் இணைந்துள்ள முன்னாள் ஆப்கானிஸ்தான் துணை ஜனாதிபதியான அம்ருல்லா சலே வெளியிட்டுள்ள காணொளியில்,
‘இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. நாங்கள் நெருக்கடியான சூழலில் தான் இருக்கிறோம் என்பதில் சந்தேகம் இல்லை. நாங்கள் தாலிபன்களின் படையெடுப்பை எதிர்கொண்டு வருகிறோம்.
தான் ஆப்கானிஸ்தானை விட்டு ஓடிவிட்டதாகக் கூறுவது தவறு என்பதை உறுதிப்படுத்தவே இந்த காணோளியைப் பகிர்கிறேன்’ எனக் கூறினார்.
அமெரிக்கா உட்பட மேற்குலகப் படைகள் பின் வாங்கத் தொடங்கி ஒரு சில வாரங்களிலேயே, தலிபான்கள் ஆப்கானிஸ்தானை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதும், 1.5 – 2.0 இலட்சம் பேர் வாழும் பஞ்ஷீர் மாகாணம் மட்டும் தலிபான்களுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றது.
1980களில் ரஷ்யப் படைகளுக்கு எதிராகவும், 1990களில் தலிபன்களுக்கு எதிராகவும் தற்போதைய பஞ்ஷீர் போராளிகள் அமைப்பின் தற்போதைய தலைவர் அஹ்மத் மசூத்தின் தந்தை அஹ்மத் ஷா மசூத் போரிட்டவர் என்பது நினைவுகூரத்தக்கது.
இந்த மாகாணப் படையில் முன்னாள் ஆப்கான் அரசப் படை வீரர்கள், உள்ளூர் ஆயுதமேந்திய வீரர்கள் இருக்கின்றனர்.