அபெர்டீன் (Aberdeen) மற்றும் இன்வர்னெஸ் (Inverness) ஆகிய நகரங்களுக்கு இடையிலான ரயில் பாதையில் பராமரிப்பு ரயில் ஒன்று தடம் புரண்டதையடுத்து, அந்தப் பாதையிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு ஹன்ட்லி (Huntly) மற்றும் இன்ச் (Insch) ஆகிய இடங்களுக்கு இடையே தடம் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த ரயில் ஒன்று குறைந்த வேகத்தில் சென்றுகொண்டிருந்தபோது தடம் புரண்டது.
இதனால் அந்த ரயில் பாதை முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.
தடம் புரண்ட ரயிலை மீண்டும் தண்டவாளத்தில் ஏற்றும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இருப்பினும், இன்று நாள் முழுவதும் ரயில் சேவைகளில் பாதிப்பு இருக்கும் என ஸ்கொட்ரயில் (ScotRail) நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கமைய இன்வர்னெஸ் முதல் அபெர்டீன் வரையான சேவைகள் ஹன்ட்லி நிலையத்துடன் நிறுத்தப்படும்.
அங்கிருந்து மீண்டும் இன்வர்னெஸ் நோக்கிய பயணங்கள் ஆரம்பமாகும்.
பயணிகளின் வசதிக்காக வரையறுக்கப்பட்ட அளவில் மாற்றுப் பேருந்து சேவைகள் (Rail replacement transport) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், ரயில் பயணச் சீட்டுகளைக் கொண்டுள்ள பயணிகள் ஸ்டேஜ்கோச் நார்த் (Stagecoach North) நிறுவனத்தின் 10 மற்றும் M96 ஆகிய பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.













