ஐஆர்ஏ (IRA) குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தொடர்பு இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, லண்டன் நீதிமன்றத்தில் ஜெர்ரி ஆடம்ஸ் (Gerry Adams) இன்று நேரில் முன்னிலையாகி சாட்சியமளித்துள்ளார்.
1973-ஆம் ஆண்டு லண்டன் ஓல்ட் பெய்லி (Old Bailey) குண்டுவெடிப்பு மற்றும் 1996-ஆம் ஆண்டு லண்டன் டாக்லேண்ட்ஸ் (Docklands), மான்செஸ்டர் ஆர்ன்டேல் (Manchester Arndale) பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் காயமடைந்த மூவர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளனர்.
ஐஆர்ஏ அமைப்பின் இராணுவ சபையில் 30 ஆண்டுகளாக உறுப்பினராகவும், அதன் தலைவராகவும் இருந்த ஜெர்ரி ஆடம்ஸ், இந்தத் தாக்குதல்களுக்கு தனிப்பட்ட ரீதியில் பொறுப்புக்கூற வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.
தற்போது 77 வயதாகும் முன்னாள் சின் பெயின் (Sinn Féin) தலைவர் ஜெர்ரி ஆடம்ஸ், இந்தத் தாக்குதல்களில் தனக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை எனத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அத்துடன் தான் ஒருபோதும் ஐஆர்ஏ அமைப்பில் இருந்ததில்லை என்பதையும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
தனது தரப்பு சாட்சியமாக அவர் மட்டுமே நீதிமன்றத்தில் முன்னிலையாகினார்.
பாதிக்கப்பட்டவர்கள் தலா £1 பவுண்ட் மட்டுமே அடையாள இழப்பீடாகக் கோரியுள்ளனர்.
பணத்தை விடவும், ஜெர்ரி ஆடம்ஸின் பொறுப்பை உறுதிப்படுத்துவதே இவர்களின் பிரதான நோக்கமாகும்.
இந்த வழக்கு பல தசாப்தங்களுக்குப் பின்னர் தொடரப்பட்டுள்ளதால், கால வரம்பு சட்டத்தின் (Statute of limitations) கீழ் இதனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என ஆடம்ஸின் வழக்கறிஞர்கள் வாதிடுகின்றனர்.
இதேவேளை, ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் மற்றும் பொலிஸார் வழங்கிய சாட்சியங்களின்படி, 1970-களின் பிற்பகுதியிலிருந்து 2005 வரை ஐஆர்ஏ-வின் முக்கிய முடிவுகளை எடுக்கும் சபையில் ஆடம்ஸ் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் முன்னாள் அரச வழக்கறிஞர் சர் மேக்ஸ் ஹில் (Sir Max Hill KC) இன்று ஜெர்ரி ஆடம்ஸிடம் குறுக்கு விசாரணை நடத்தவுள்ளார்.
கடந்த காலங்களில் சில குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டிருந்தாலும், இந்த சிவில் வழக்கு அவருக்கு ஒரு முக்கிய சட்டச் சவாலாகக் கருதப்படுகிறது.













