இந்த மாத இறுதியில் ஜப்பான் பிரதமர் சுகா யோஷிஹைட், தனது பதவியிலிருந்து விலக முடிவு செய்திருப்பதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெற உள்ள ஜப்பானின் ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என பிரதமர் சுகா யோஷிஹைட், தெரிவித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தலைநகர் டோக்கியோவில் ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து பேசிய யோஷிஹைட் சுகா, கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்தார்.
ஜப்பானை பொறுத்தவரையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வகிக்கும் அரசியல் கட்சியின் தலைவர் யாரோ அவரே அரசாங்கத்தின் தலைவராகவும் அதாவது பிரதமராகவும் தேர்வு செய்யப்படுவார்.
அந்த வகையில் பிரதமர் யோஷிஹைட் சுகா கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளதால், அவர் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்வார் என தெரிகிறது.
இதன்படி ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படும் நபர் ஜப்பானின் புதிய பிரதமராக பதவி ஏற்பார்.
ஜப்பானின் தடுப்பூசி திட்ட தலைவர் டாரோ கோனா மற்றும் மத்திய உட்துறை அமைச்சர் சானே தகைச்சி ஆகிய இருவரும் களத்தில் உள்ள முக்கிய வேட்பாளர்களாக அறியப்படுவதாகவும் இவர்களில் ஒருவர் பிரதமராக தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஜப்பானின் முதல் இளம் வயது பிரதமர் மற்றும் நீண்ட காலம் பிரதமர் பதவியில் இருந்த முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபே, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நிலையைக் காரணம் காட்டி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தததையடுத்து பிரதமர் அபேயின் அரசாங்கத்தின் அமைச்சரவை தலைமை செயலாளராக இருந்த சுகா யோஷிஹைட் ஜப்பானின் புதிய பிரதமராக பதவியேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் குடும்பத்தின் வாரிசாக இல்லாமல், ஒரு சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்த யோஷிஹைட் சுகா, பிரதமர் பதவிக்கு வந்ததும் நாட்டில் டிஜிட்டல் மாற்றம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் உட்பட தொடர்ச்சியான நடைமுறை நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தி மக்களின் ஆதரவை அதிக அளவில் பெற்றார்.
ஆனால், பெருந் தொற்று காலத்தில் ஒலிம்பிக்கை நடத்தியமை மற்றும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுப்பதில் மிகவும் மந்தமாக செயற்பட்டதால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.