இங்கிலாந்து மற்றும் இந்தியக் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இதன்படி இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இந்தியா அணி, நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், விக்கெட் இழப்பின்றி 43 ஓட்டங்களை பெற்றுள்ளது.
ஆட்டநேர முடிவில், ரோஹித் சர்மா 20 ஓட்டங்களுடனும் கே.எல். ராகுல் 22 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், இந்தியா அணி 56 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.
கடந்த 2ஆம் திகதி கெனிங்டன்- ஓவல் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுப்பட்டது.
இதன்போது முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸிற்காக 191 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சர்துல் தாகூர் 57 ஓட்டங்களையும் விராட் கோஹ்லி 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளையும் ரொபின்சன் 3 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் எண்டர்சன் மற்றும் கிரைஜ் ஓவர்டொன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 290 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஒல்லி போப் 81 ஓட்டங்களையும் கிறிஸ் வோக்ஸ் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும் பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் தாகூர் மற்றும் சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
தற்போது 99 ஓட்டங்கள் பின்னிலையில் இந்தியக் கிரிக்கெட் அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடர்ந்துள்ளது. இன்னமும் 10 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில் போட்டியின் மூன்றாவது நாளான இன்று தொடர்ந்து துடுப்பெடுத்தாடவுள்ளது.