தலிபான்கள் நாகரிகமாக நடந்துகொண்டால் பேச்சுவார்த்தை நடத்தலாம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
கிழக்கு பொருளாதார கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தான் உடைவதை ரஷ்யா விரும்பவில்லை. ஆப்கானிஸ்தானுடன் உலக நாடுகள் ராஜாங்க ரீதியாக உறவை நீட்டிக்க வேண்டும் என தலிபான்கள் விரும்பினால் முதலில் அவர்கள் நாகரிகமாக நடந்துகொள்ள வேண்டும்.
பன்படுத்தப்பட்ட சமூகமாக அவர்கள் மாற வேண்டும். எப்போது வேண்டுமானால் எளிதில் தொடர்பு கொள்ளலாம், எளிதில் பேசலாம், சமரசம் செய்யலாம் என்ற நிலையை அவர்கள் எட்ட வேண்டும். யாரிடமிருந்தும் கேள்விகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்’ என கூறினார்.
இதனிடையே, சீனா தங்களின் மிக முக்கிய நட்பு நாடு எனவும் ஆப்கானிஸ்தானை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதற்கு சீனாவைப் பெரிதும் நம்பியிருப்பதாகவும் தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.