கிரியுல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் இன்று (22) காலை போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்காக மேற்கொண்ட நடவடிக்கையின்போது, துப்பாக்கிச் சூடு நடத்தி கார் ஒன்றை மடக்கிப் பிடித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபரின் காரை பின்தொடர்ந்த அதிகாரிகள், காரை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.
எனினும், சந்தேகநபர் பொலிஸாரின் உத்தரவை மீறி காரை செலுத்திச் சென்றதாகவும், இதனையடுத்து காரின் டயர்களை இலக்கு வைத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, அருகிலுள்ள நகரப் பகுதியில் கார் நிறுத்தப்பட்டதுடன், அதிலிருந்த சந்தேகநபரும் பின்புற இருக்கையில் இருந்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது 15 கிராம் ஹெரோயின், 260 மில்லி கிராம் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 924,770 ரூபாய் பணம் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரியுல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.















