பிரித்தானியாவின் தெற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பல பகுதிகளுக்கு பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை அலுவலகம் மஞ்சள் நிற வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை, ஒக்டோபர் 23ஆம் திகதி அதிகாலை முதல் நண்பகல் 12 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது மணிக்கு 50 முதல் 60 மைல் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், கடலோரப் பகுதிகள் மற்றும் திறந்த வெளிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 மைல்களையும் தாண்டக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பலத்த காற்றுடன் கனமழையும் பெய்யக்கூடும் என்பதால், வீதிப் போக்குவரத்து, ரயில் சேவைகள், விமானப் பயணங்கள் மற்றும் படகுப் போக்குவரத்துகளில் தாமதங்கள் அல்லது சேவை ரத்துகள் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், மரக்கிளைகள் முறிந்து விழுதல், கட்டடங்களின் கூரைப் பகுதிகள் சேதமடைதல் மற்றும் மின்சாரத் தடைகள் ஏற்படுவதற்கான சாத்தியங்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
பொதுமக்கள் பயணங்களைத் திட்டமிடுவதற்கு முன்னர் போக்குவரத்து மற்றும் வானிலைத் தகவல்களைச் சரிபார்க்குமாறும், வீட்டுக்கு வெளியே உள்ள தளர்வான பொருட்களைப் பாதுகாப்பாக வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்வோர் பலத்த அலைகள் மற்றும் காற்றினால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து அவதானமாக இருக்குமாறு வானிலை அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.















